ஒரு ஜென் துறவியொருவர் அந்த ஊர் மடத்தில் வந்து தங்கியிருந்தார். உள்ளூர்க்காரன் ஒருவன் அவரைத் தேடி வந்தான்.
``என்னால் வாழ்க்கையில் முன்னேறவே முடியவில்லை. என் வயதுத் தோழர்கள், என் உடன் படித்தவர்கள், ஏன்... அடுத்த வீட்டுக்காரன் உள்பட எல்லோரும் எங்கெங்கேயோ போய்விட்டார்கள். நான் இன்னும் ஒரு துளிகூட முன்னேறவில்லை. நான் என்ன செய்யட்டும் ஐயா?’’
இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் அவன் துறவியிடம் வேண்டி வந்திருந்தான். துறவி அவனிடம் சில கேள்விகள் கேட்டார்.
``என்ன வேலை பார்க்கிறாய்?’’
``கூலி வேலை.’’
``வருமானம்?’’
``போதுமான அளவுக்கு இல்லை. இருக்கிறதை வைத்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.’’
``வேறு வேலைக்கு முயற்சி செய்யவில்லையா?’’
``பயமாக இருக்கிறது. புது இடம், புது எஜமானன் சரியில்லை என்றால் என்ன செய்வது என்கிற அச்சம்...’’
``சுயதொழில் செய்ய உனக்கு ஆர்வம் இல்லையா?’’
``இருக்கிறது. ஆனால், அதுவும் பயமாக இருக்கிறது. தொழில் தொடங்கி நான் அதில் என் பொருளை இழந்துவிட்டால் என்ன செய்வது? என்னிடம் வியாபார நிமித்தமாக வருபவர்கள் என்னை ஏமாற்றிவிட்டால் நான் என்ன செய்வேன்? இதையெல்லாம் யோசித்துத்தான் நான் தொழில் தொடங்குவதை தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன்...’’
ஜென் குரு அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
``சொல்லுங்கள் குருவே... நான் என்ன செய்ய வேண்டும்? என் வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கிற உபாயம் ஏதாவது இருக்கிறதா? எத்தனை நாள் பயிற்சி எடுக்க வேண்டும்? அதற்கான மந்திரங்கள் இருந்தால்கூட சொல்லுங்கள். நிச்சயம் அதைக் கடைப்பிடிக்கிறேன்...’’
``உன் பிரச்னை தீர ஒரு வழி இருக்கிறது. அதைக் கடைப்பிடிப்பாயா?’’
வந்தவனின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. ``நிச்சயமாக குருவே... நீங்கள் என்ன சொன்னாலும் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.’’ - அவன் குரலில் அப்படி ஓர் உறுதி.
``சரி, இன்றைக்கு ஒரு நாள் இரவு மட்டும் நான் சொல்கிறபடி செய். உன் பிரச்னை தீர்ந்துவிடும்’’ என்றார்.
``ஒரு நாளில் என் பிரச்னை தீர்ந்துவிடுமா, அப்படி என்ன அற்புத மந்திரம் அது? உடனே சொல்லுங்கள் குருவே...’’ என்றான்.
``மந்திரம் எல்லாம் இல்லை. இன்று இரவு மட்டும் நீ குரங்குகளைப் பற்றி நினைக்கக் கூடாது.’’
``என்னது குரங்கா... நினைக்கக் கூடாதா? மந்திரம் எல்லாம் ஒன்றும் இல்லையா?’’
``எதிர்க் கேள்வி கேட்காதே! நான் சொல்கிறதை மட்டும் செய்!’’
துறவியின் குரலில் உஷ்ணம் ஏறிக் கிடந்ததை உணர்ந்தான். அவருக்கு நன்றி கூறிவிட்டு வீடு நோக்கி நடந்தான். வழியிலேயே துறவி கூறியதுதான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது. குரங்கு, அதன் வால், பற்கள், உருண்டைக் கண்கள், சேட்டைகள்... ``சே!’’ என்று தலையை உதறிக்கொண்டான்.
`ஏன், துறவி குரங்கு பற்றி நினைக்க வேண்டாம் எனச் சொன்னார்? நான் குரங்குக்கு ஏதாவது துன்பம் இழைத்திருப்பேனோ? அப்படி ஒன்றும் நினைவில்லையே. ஒருநாள் மலையில் ஒரு குரங்கைப் பார்த்தபோது அதுவல்லவா என் சோற்று மூட்டையைப் பறித்துக்கொண்டு ஓடியது? அந்தச் சமயத்தில்கூட நான் அதை ஒன்றும் செய்யவில்லையே! ஒரு சிறு கல்லைக்கூடத் தூக்கிப் போடவில்லையே! ஒருவேளை கடந்த பிறவியில் குரங்குக்கு ஏதாவது தீங்கிழைத்திருப்பேனோ! சரி... துறவியே சொல்லிவிட்டார். அதனால், நிச்சயம் இதில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால், கண்டிப்பாக இரவில் குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது’ என்று மனதுக்குள் நினைத்தபடி வீட்டுக்கு நடந்தான்.
இரவு நெருங்கியது. வேலைகளை முடித்துவிட்டு தூங்கத் தயாரானான். தூக்கம் வரவில்லை. குரங்கு குறித்த சிந்தனையே அவனைத் துரத்தியது. ஜன்னலில் ஒரு குரங்கு ஏறி அவனையே பார்ப்பதாக எண்ணம். கதவைப் பிராண்டுவதாக உள்ளுணர்வு. நெடு நேரத்துக்கு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல், களைப்பால் கண்ணயர்ந்தான். கனவிலும் குரங்கள் அவனைத் துரத்தின. நிஜத்தில் அவனை ஒரு குரங்கு பிராண்டவில்லையே தவிர, மற்ற எல்லாம் நடந்தது. குரங்குச் சிந்தனை அவனைப் பாடாகப்படுத்தி எடுத்துவிட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் அந்தச் சிந்தனையை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பைத்தியம் பிடித்தவனைப்போல் ஆகிவிட்டான். எப்போது விடியும் எனக் காத்திருந்து ஜென் துறவி தங்கியிருந்த மடத்துக்கு ஓடினான். அவரைச் சரணடைந்தான்.
``குருவே, நான் முதலாளி ஆக வேண்டாம். இதைவிட அதிகமாகக் கூலி கிடைக்கும் வேலைகூட வேண்டாம். தயவு செய்து, அந்தக் குரங்களிடமிருந்து மட்டும் என்னைக் காப்பாற்றுங்கள்’’ மன்றாடியவன் மேலும் தொடர்ந்தான்.
``ஒன்று மட்டும் உண்மை. நான் குரங்குக்கு ஏதோ பாவம் இழைத்துவிட்டேன் என்பது மட்டும் தெரிகிறது. அதற்கு என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்துவிடுகிறேன். இந்தக் குரங்குச் சிந்தனை என்னை தற்கொலை செய்துகொள்வது வரை தூண்டுகிறது. காப்பாற்றுங்கள் குருவே!'
அந்த ஜென் குரு மென்மையாகச் சிரித்தார். ``உண்மையில் நீ எந்தக் குரங்குக்கும் பாவம் செய்யவில்லை. இதைப் புரிந்துகொள். குரங்குக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முதலில் நிம்மதிகொள்’’ என்றார்.
துறவியின் பதில் கேட்டு அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். ``என்ன... குரங்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? அப்படி என்றால் என்னை ஏன் குரங்குகள் விடாமல் துரத்துகின்றன?’’ என்றான்.
சில நிமிட அமைதி காத்த பிறகு குரு அவனுக்கு விளக்கத் தொடங்கினார்.
``உன் எண்ணங்களுக்கு நீயே அதிபதி. அவற்றை நீயே தீர்மானிக்கிறாய். வெளியிலிருந்து யாரும் மற்றொருவரின் எண்ணத்தைக் கட்டுபடுத்தவோ, மாற்றவோ முடியாது. உனக்கு எது தேவையோ அதைப் பற்றி மட்டுமே சிந்திக்கக் கற்றுக்கொள். குரங்கைப் பற்றி நினைக்கக் கூடாது என்றதும் நீ அதைப் பற்றியே நினைத்தாய். உன் சிந்தனை அதிலேயே இருந்தது. எனவே, உனக்குப் பயன்படாத ஒன்றைப் பற்றி சிந்திக்காதே. `எதுவும் நன்றாக நடக்கும்’ என்று நம்பு. ஒன்றை ஆரம்பிக்கும்போதே இப்படி நடந்து விடுமோ என நீயாக ஒரு முடிவுக்கு வந்து குழம்பிக்கொள்ளாதே.
இந்த எதிர்மறை எண்ணம்தான் உன் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. அதை விட்டுவிட்டு நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொள். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்கிக்கொள்.’’
மனம் வார்த்தைகளின் கோர்வை. குரங்கு என்ற சொல் போதும் குரங்கை பற்றிக்கொள்ள. அதனால் நாம் பேசும் போது நல்ல விஷயங்களை - அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் மேன்மையைக் கூட்டும் வார்த்தைகளை மட்டும் பேசுவது என்பது அடிப்படைத் தேவை ஆகிறது.